Last Updated:
இந்தியாவிலும் இலங்கையிலும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விளம்பர தூதராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு ஐந்து அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ, பி, சி, டி என பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகளில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானம் உட்பட மொத்தம் 8 மைதானங்களில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணியில் ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார்.
November 25, 2025 9:15 PM IST


