அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.
இந்நிலையில், இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்ச சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்சர் 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
இந்திய அணியின் துல்லியமான பவுலிங்கிற்கு முன்னால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின் ஆலன் 9 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 5 ரன்களும, மார்க் சேப்மேன் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
தொடக்க வீரர் டிம் செய்பர்ட் மட்டும் அரைச்சதம் கடந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். 52 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்ரவர்த்தி வெளியேற்றினார். டேரில் மிட்செல் 17 ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதுடன் 3 முக்கிய சாதனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டி20 உலகக்கோப்பை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக தொடர்ந்து 2 ஆவது முறையாக வென்ற அணி, அதாவது கோப்பையை தக்க வைத்துக் கொண்ட முதல் அணி என்ற ரிக்கார்டும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், போட்டியை நடத்தி உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற அணி என்ற சாதனையையும் இன்று படைத்துள்ளது இந்திய அணி.
