Last Updated:
அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள 2 போட்டிகளிலும் இந்தியா அதிக ரன் அல்லது விக்கெட் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் விலகியுள்ளார். நாளை இந்திய அணி முக்கியமான ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை சென்னை மண்ணில் எதிர்கொள்ளவுள்ள நிலையில் ரின்கு சிங் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங்கிற்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அறிந்தவுடன், சென்னையில் இருந்த ரிங்கு சிங் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் உடனிருப்பதற்காக டெல்லி சென்றுள்ளார்.
தந்தை கான்சந்த் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டால் ரின்கு சிங் இந்திய அணி திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிங்கு சிங்கிற்கு பதிலாக இந்திய அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் இவர் விளையாடாதது ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு, இந்தியா தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள 2 போட்டிகளிலும் இந்தியா அதிக ரன் அல்லது விக்கெட் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

