Last Updated:
போட்டி நடத்தப்பட இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், ஐசிசி இறுதி முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணி அந்த போட்டியில் பங்கேற்காது என்று சமீபத்தில் அறிவித்தது.
இதனால் கடும் விளைவுகளை பாகிஸ்தான் அணி சந்திக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐசிசி உடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழலில் இவ்வாறான தகவல்களில் உண்மை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் அமீர் மிர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது. இந்த முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது சம்பந்தமாக ஐசிசி உடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இந்த நிலையில், அதனை மறுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

