Last Updated:
அடுத்ததாக இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் போட்டி ஞாயிறு அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்கள் குவித்தது.
கட்டாய வெற்றியை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 256 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 24 ரன்களும், அபிஷேக் சர்மா 55 ரன்களும் குவித்தனர்.
அடுத்து வந்த இஷான் கிஷன் 38 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களும், திலக் வர்மா 44 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்திய அணியின் இன்னிங்ஸில் மட்டும் 17 சிக்சர்கள் பறந்தன. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்கம் முதலே கட்டுக் கோப்பாக இந்திய அணியின் பவுலர்கள் பந்து வீசியதால் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை.
தொடக்க வீரர்களில் தடிவனாஷ மருமனி 20 ரன்களும், கேப்டன் சிக்கந்தர் ராசா 31 ரன்களும் எடுத்தனர். ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் திணறினாலும் மறுமுனையில் தொடக்க வீரர் பிரையன் பென்னட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
59 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Feb 26, 2026 11:05 PM IST

