Last Updated:
பாஜக தற்போதே 183 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (மே 4, 2026) தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதற்காக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும் அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த 293 சட்டமன்றத் தொகுதிகளுக்காக 77 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மேற்கு வங்கத்தில் 92.47% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கத்தில் பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுதான் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 183 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அக்கட்சிக்கு இத்தேர்தலில் கடும் சவாலை கொடுத்துள்ளது பாஜக. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக தற்போதே 183 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
May 04, 2026 11:38 AM IST

