அக்டோபர் 7, 2023 முதல் ஜூன் 13, 2025 வரையிலான 615 நாள்களில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 56,000 -க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 17,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.
காஸாவைத் தவிர, இந்தக் காலகட்டத்தில் ஏமன், லெபனான், ஈரான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. இப்படி குற்றங்களை செய்த, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐ.நா சபையும் கண்டித்த நெதன்யாகு அமெரிக்காவின் ஆதரவால் தொடர்ந்து தப்பிக்க வைக்கப்படுகிறார்.
எனவே, இந்தக் குற்றங்கள் எல்லாம், ஈரான் மீதான தாக்குதல் மூலம் திசை திருப்பப்பட்டிருக்கிறது என்கிறது firstpost. இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்ரேலில் நெதன்யாகுவின் அரசியல் பலத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த லாபங்களை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில் நெதன்யாகு அறுவடை செய்துக்கொள்வார் எனக் கருதப்படுகிறது.
ஈரான்:
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவுகள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கைகளை வைத்துப் பார்த்தால், இந்தப் போரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ஈரான்தான் என்பதுபோல தோற்றம் இருக்காலாம். ஆனால் அதுவும் உண்மையல்ல.
இந்தப் போரின் முக்கியக் காரணங்களில் ஒன்று ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது’ என்ற குற்றச்சாட்டுதான். ஆனால், அமெரிக்காவின் B-2 குண்டுகளாலும், இஸ்ரேலின் இத்தனைத் தாக்குதல்களாலும் அணு ஆயுத தளங்களை எதுவும் செய்ய முடியவில்லை எனபதுதான் நிதர்சன உண்மை.

