Last Updated:
Waqf Amendment Bill : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்பட வேண்டும் என வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
“ஏழை முஸ்லிம்களை மேம்படுத்த இதுவரை வக்ஃப் சொத்துக்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?” என்று வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமிய மதத்தில் வக்ஃப் என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது போன்ற வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது 8 மணி நேர விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மசோதாவை அறிமுகம் செய்து வைத்து மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசி வருகிறார்.
கிரண் ரிஜிஜு பேசுகையில், “வக்ஃப் மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. இது சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான விஷயம் மட்டுமே. வக்ஃப் வாரியத்தில் ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத நிபுணர்களைச் சேர்க்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. காங்கிரஸ் 123 அரசு சொத்துக்களை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைத்து. நாங்கள் மசோதாவைக் கொண்டு வரவில்லை என்றால், நாடாளுமன்ற கட்டிடமும் வக்ஃப் சொத்தாகக் கூறப்படும்.
இந்த மசோதாவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படுவார்கள். வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை இப்படியே விட்டுவிட முடியாது. உலகிலேயே மிகப்பெரிய வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. ஏழை முஸ்லிம்கள் பயனடைய அவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஏழை முஸ்லிம்களை மேம்படுத்த வக்ஃப் சொத்துக்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?. மோடி அரசு அவர்களுக்கு ஏதாவது செய்தால் எதிர்க்கட்சிகள் ஏன் ஆட்சேபிக்கிறது?. வக்ஃப் ஒரு தனியார் சொத்து.
தன்னைப் பார்வையிட வந்த முஸ்லிம் பிரதிநிதிகள் வக்ஃப் திருத்த மசோதாவை வரவேற்றுள்ளனர். மேலும் ஏழை முஸ்லிம்கள் மசோதா விரைவில் நிறைவேற விரும்புகிறார்கள். வக்ஃப் திருத்த மசோதா சட்டம் எதிர்காலத்திற்கானது. மேலும் இந்த சட்டம் முஸ்லிம்களின் சொத்துக்களைப் பறிக்க முயலவில்லை. முஸ்லிம்களின் எந்த சொத்தையும் யாரும் அபகரிக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். பதிவு செய்யப்பட்ட சொத்துக்களில் தலையிடப்படாது.
மசோதாவில், அரசு நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டால், கலெக்டர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரி தீர்ப்பளிப்பார் என்ற கூட்டுக்குழு பரிந்துரையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். கூட்டுக்குழு பரிந்துரைத்தபடி, தீர்ப்பாயத்தில் நிலையான பதவிக்காலம் கொண்ட 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். தீர்ப்பாயத்தின் உத்தரவில் அதிருப்தி அடைந்தால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
எனவே, முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமையை வழங்குவதன் மூலம் அரசாங்கம் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வர நினைக்கிறது. வக்ஃப் சட்டதிருத்த மசோதா இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பாதிக்காது” என்று பேசி முடித்தார்.
இதற்கிடையே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு வாரிய மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பி வருகின்றனர். அமைச்சர் தவறான தகவல்களை அவையில் முன்வைப்பதாக ஆ.ராசா குற்றச்சாட்டு தெரிவித்தார்.
Delhi,Delhi,Delhi
April 02, 2025 1:28 PM IST
Waqf Amendment Bill: “வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்பட வேண்டும்” – மசோதா அறிமுகத்தில் கிரண் ரிஜிஜு பேச்சு!