VTIC: சின்ன சின்ன முதலீடு.. ஆனா ரொம்ப முக்கியமான துறையில் வந்திருக்கு.. வாவ்..!
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 97 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில், விண்வெளி, ஏரோஸ்பேஸ், மருத்துவ போன்ற முக்கியமான துறைகளை தாண்டி செமிகண்டக்டர் துறையில் சில சிறப்பு முதலீடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெக் துறையின் அடுத்த புரட்சி செமிகண்டக்டர் துறையில் தான் நடக்கப்போகிறது என கணிப்புகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் துறையில் பெரிய முதலீடுகளும், முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

இத்துறையில் வரும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு, வேஃபர், OSAT முதலீடுகள் அனைத்தும் வட இந்திய மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் செமிகண்டக்டர் துறையில் 2ஆம் நிலையில் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தற்போது முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது. இந்த வரிசையில் சுமார் 5 முதலீடுகள் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்துள்ளது.
1. மலேசியாவை சேர்ந்த கினெசிஸ் செமிகண்டக்டர் வயர் சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனம் சென்னையில் 193 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்தியாவின் முதல் உள்ளூர் செமிகண்டக்டர் பாண்டிங்-வயர் உற்பத்தி ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
2. பிக்ப்ரோ சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனம் கிருஷ்ணகிரியில் 443 கோடி ரூபாய் முதலீடு செய்து MIL-STD-883 தரத்திற்கு ஏற்ப சுயாதீன நம்பகத்தன்மை மற்றும் தோல்வி சோதனை ஆய்வகத்தை அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
3. சிங்கப்பூரை சேர்ந்த ரிச்போர்ட் டெக்னாலஜி செமிகண்டக்டர் உபகரண உற்பத்தியாளர்களுக்கான துல்லிய சுத்தம் மற்றும் surface treatment சேவை அளிக்க 130 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
4. அவலான் டெக்னாலஜீஸ் செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்திக்காக 1,000 கோடி ரூபாய் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசும் அவலான் டெக்னாலஜீஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
5. PTW செமிகண்டக்டர் செமிகண்டக்டர் உபகரண உருவாக்குதல், அசெம்பிளி மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டிற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

