சமீபத்தில் விராட் கோலி தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 123 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்தான், கடந்த திங்கட்கிழமை அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்த ஓய்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறும்போது, “விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைத்தார் என்று நினைக்கிறேன். விராட் கோலியிடம் பிசிசிஐ நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும். கடந்த 5 – 6 ஆண்டுகாலம் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து அவரிடம் பிசிசிஐ கூறி, அவர் இனி விளையாட முடியாது என கூறியிருக்கலாம். யாருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாது.
ஆனால், அவர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என கூறியபோது, அவர் ரஞ்சியில் விளையாடினார். நிச்சயம் அவர் டெஸ்ட் போட்டியில் மீண்டும் வர வேண்டும் என்றே நினைத்தார். ஆனால், அவருக்கு தேவையான ஆதரவை பிசிசிஐயும், செலக்டர்களும் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
நடந்துமுடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அவருக்கு ரன் அதிகமாக அடிக்க வேண்டும் என்ற அவசரம் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் நீண்ட நேரம் களத்தில் இருந்து, பவுலர்களை சோர்வாக்கி, ரன்களை சேர்க்க வேண்டும். ஆனால், விராட் கோலி இருந்த அவசரத்தில் தொடர்ந்து அவர் அதே போல தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒரு காலத்தில் அவரிடம் அதிக பொறுமை இருந்தது. ஆனால், இப்போது நான் எப்படியும் எனது கடைசி கட்டத்தில் இருக்கிறேன். எதற்காக பொறுமையாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அவர் முன்புபோல பந்துகளை விட்டு, தேவையான பந்துகளை மட்டும் விளையாடவில்லை.
அவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாதது உண்மைதான். ஆனால், 36 வயதிலும் சரியான உடற்தகுதியோடு இருக்கும் விராட் கோலி ஏற்கனவே செய்ததைபோல மீண்டும் வந்திருக்கலாம். இளம் வீரர்களை அவர் வழிநடத்தி இருக்கலாம். அவரது அனைத்து வீடியோக்களிலும், அவருக்கு பிடித்த ஃபார்மேட்டாக டெஸ்ட் போட்டியை தான் குறிப்பிடுவார். ஆனால், தற்போது அவர் எடுத்திருப்பது அவரது முடிவு” என தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியை இந்த வாரம் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
May 15, 2025 10:08 AM IST

