Last Updated:
Viral Video: மும்பையில் பீட்சா டெலிவரி பாயிடம் அத்துமீறிய தம்பதியின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பீட்சா டெலிவரி பாயிடம் மராத்தியில் பேச கூறி, தம்பதி கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புறநகர் பகுதியில் பந்துப் அமைந்துள்ளது. அங்கு, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதில், ஒரு குடியிருப்பில் வசிக்கும் தம்பதி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் டெலிவரி பாய் ஒருவர், பீட்சா பார்சலுடன் வந்துள்ளார்.
இரும்பு கதவுக்கு உள்பக்கம் இருந்த தம்பதி பவ்யமாக அவரிடம் பீட்சாவை வாங்கியுள்ளனர். இதையடுத்து, டெலிவரி பாய் பணத்தை கேட்கும்போது தான், மராத்தியில் பேச கூறி அவர்கள் நிர்பந்தித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெலிவரி பாயிடம், கணவன் – மனைவி இருவரும் விதண்டாவாதம் பேசியுள்ளனர். மேலும், பீட்சா ஆர்டர் செய்யும்போது மராத்தியில் பேச வேண்டும் என கூறினீர்களா? என்று அந்த இளைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, இங்கு எல்லாம் அப்படித்தான் என கூறி தெனாவட்டாக பேசியுள்ளனர். இந்த வாக்குவாதம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர். இறுதியாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான பீட்சா பாய், பணம் ஏதும் வாங்காமல் அங்கிருந்து வெறும் கையுடன் திரும்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும், இது தொடர்பாக பீட்சா டெலிவரி நிறுவனம் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai,Maharashtra
“சொன்னதை செய்தால் தான் காசு..” பீட்சா டெலிவரி பாயிடம் அத்துமீறல்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!


