Last Updated:
வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் கொல்கத்தா-கவுகாத்தி வழியில், RAC மற்றும் காத்திருப்பு பட்டியல் இல்லாமல், புதிய கட்டண நிர்ணயம் மற்றும் வகுப்பு ஏசி பெட்டிகள் அறிவிப்பு.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள மத்திய ரயில்வே வாரியம், டிக்கெட் முன்பதிவில் RAC, காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறாது என்றும் அறிவித்துள்ளது.
நாட்டின் முதலாவது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை கொல்கத்தா – கவுகாத்தி வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்களுக்கான டிக்கெட் கட்டண நிர்ணயம் உள்ளிட்டவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மட்டுமே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு 400 கிலோமீட்டர் தூரத்தை கணக்கிட்டு குறைந்தபட்ச கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும். 400 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்திற்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு 960 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு ஆயிரத்து 240 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு ஆயிரத்து 520 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும் RAC, காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


