Last Updated:
இரு அணிகளின் அதிரடி ஆட்டக்காரர்களும் மோதும் இப்போட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த டி20 விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று எலிமினேட்டர் சுற்றில் மோதுகின்றன. நியூ சண்டிகர் முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த நாக்-அவுட் போட்டியில், தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
குறிப்பாக, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முறையே 6 மற்றும் 8-வது இடங்களில் உள்ள வைபவ் சூர்யவன்ஷி (583 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (563 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடி ஆட்டமும் மைதானத்தில் பவுண்டரி மழையை பொழிய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில், ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரபுல் ஹிங்கேயின் வீசிய முதல் ஓவரிலேயே 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, வெறும் 36 பந்துகளில் சூர்யவன்ஷி அதிவேக சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து தம்மாலும் அதே வேகத்தில் பதிலடி கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார். எனவே, இன்றைய நாக்-அவுட் போட்டியிலும் பவர்பிளே ஓவர்களில் இந்த இரு இடதுகை பேட்ஸ்மேன்களும் ஆட்டத்தின் போக்கை மாற்ற தீவிரமாக முயல்வார்கள் என்பதால் ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.
நடப்புத் தொடரின் லீக் சுற்றில் ராஜஸ்தான் அணியை இரண்டு முறை வீழ்த்தியிருப்பதால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. தொடரின் தொடக்க பாதியில் கம்மின்ஸ் இல்லாதபோது இஷான் கிஷன் தற்காலிகமாக அணியை வழிநடத்தி, ஐந்து தொடர் வெற்றிகளுடன் அணியை மீட்டெடுத்தார்.
ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவின் அதிரடித் துவக்கத்துடன், இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரது பலமான மிடில் ஆர்டர் வரிசையும், சாகிப் உசேன் மற்றும் ஈஷன் மலிங்கா போன்ற இளம் பந்துவீச்சாளர்களும் பலம் சேர்க்கின்றனர்.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் வென்று, 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முந்தைய இரண்டு தோல்விகளுக்கு பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது.
லீக் சுற்றின் வரலாறுகள் நாக்-அவுட் போட்டிகளில் கணக்கில் வராது என்பதால், இன்றைய போட்டியில் சூர்யவன்ஷி தொடக்கத்திலேயே அதிரடி காட்டி அபிஷேக் சர்மாவின் ஆதிக்கத்தை முறியடித்தால், ராஜஸ்தான் அணிக்கு குவாலிபையர் 2 சுற்றுக்கான பாதை எளிதாகும். இரு அணிகளின் அதிரடி ஆட்டக்காரர்களும் மோதும் இப்போட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த டி20 விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


