உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் “பரஸ்பர வரி’.
இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.
இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர்.
‘ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ட்ரம்ப் தரப்பு.

அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் 6 – 3 என்கிற விகிதத்தில் 6 நீதிபதிகள் ட்ரம்பின் வரிக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை ட்ரம்பின் பரஸ்பர வரியால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன.
