கோலாலம்பூர் , ஏப்ரல் 11:
SPM தேர்வெழுதிய மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ‘UPUOnline’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு, ஏப்ரல் 13-ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி, உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ப்ரி அப்துல் காதிர் (Datuk Seri Zambry Abd Kadir) இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்கல்வித்துறை பொது இயக்குனர் டத்தோ பேராசிரியர் அஸ்லிந்தா அஸ்மான் (Datuk Prof Azlinda Azman) தெரிவித்துள்ளார்.
இதுவரை பெறப்பட்ட 351,012 மொத்த விண்ணப்பங்களில், SPM பிரிவு: 238,524 விண்ணப்பங்கள், STPM அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பிரிவு: 112,488 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
UPUOnline விண்ணப்பத்திற்கான ‘பின்’ (PIN) எண்களைப் பெற்ற 379,578 விண்ணப்பதாரர்களில், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இளைஞர்களிடையே உயர்கல்வி மீதுள்ள ஆர்வம் மற்றும் நம்பிக்கையை இந்த எண்ணிக்கை பிரதிபலிப்பதாக பேராசிரியர் அஸ்லிந்தா குறிப்பிட்டார்.
“இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாகத் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, உயர் கல்விக்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,” என அவர் வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் அவ்வப்போது வெளியிடப்படும் சமீபத்திய அறிவிப்புகளைக் கவனித்து, முறையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




