Last Updated:
விளையாட்டு மற்றும் அரசு பணி என 2 பொறுப்பை வகித்து அமாய் குராசிய அளவுக்கு யாரும் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாட்டு மற்றும் கல்வி என இரண்டிலும் தடம் பதித்த மிக முக்கியமான வீரர் அமய் குராசியா. இவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமய் குராசியா, கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கினார். தனது 22-வது வயதில் நாட்டின் மிகக் கடினமான UPSC தேர்வை எழுதி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய சுங்கத்துறையில் பணியாற்றும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது.
அரசு அதிகாரியாகப் பணியில் இருந்தபோதே, 1999-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே 45 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதே ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய சுங்கத்துறையில் அதிகாரியாக இருந்துகொண்டே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது இவருடைய தனிச்சிறப்பாகும். மத்திய அரசு வழங்கிய விளையாட்டு ஒதுக்கீடு மற்றும் சிறப்பு விடுமுறை சலுகைகளைப் பயன்படுத்தி தனது கிரிக்கெட் கனவையும், அரசுப் பணியையும் சமமாக நிர்வகித்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிசிசிஐ (BCCI) லெவல்-3 பயிற்சியாளராக மாறினார். மத்திய பிரதேச கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருந்து, தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் உள்ளிட்ட பல இளம் வீரர்களை உருவாக்கினார். இன்றும் அவர் ஒருபுறம் சுங்கத்துறை அதிகாரியாகவும், மறுபுறம் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.


