நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில், கிட்டத்தட்ட கால் பங்கை வழங்கும் அமெரிக்காவால் தூண்டப்பட்ட நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம், ஜூன் 13 ஆம் தேதிக்குள் பணிநீக்கம் குறித்து கோடிட்டுக் காட்டுமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பெருமளவு வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவரும் நிலையில், இது ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளைக் கடுமையாக பாதித்து வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட $1.5 பில்லியன் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டில் செலுத்த வேண்டிய பங்களிப்புகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“நிதி நெருக்கடியால் ஐ. நா அலுவலகத்தில் பணிபுரிவோரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்புள்ளது’ என்ற குறிப்பை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டாளரான சந்திரமௌலி ராமநாதன், அமெரிக்காவின் குறைந்த நிதி பங்களிப்பை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு பரந்த மதிப்பாய்வினை வடிவமைத்து, அதற்கு “UN80” என பெயரிட்டுள்ளதாக பகிர்ந்தார்.
மேலும் பேசிய ராமநாதன், “21ஆம் நூற்றாண்டின் பன்முகத்தன்மையை ஆதரித்து, மனித துன்பங்களைக் குறைத்து, அனைவருக்கும் சிறந்த வாழ்வு மற்றும் எதிர்காலத்தை வழங்க ஐக்கிய நாடுகள் சபை பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு லட்சிய முயற்சி இது. காலக்கெடு அங்கீகரிக்கப்பட்டுள்ளோரின் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பை நான் நம்புகிறேன்” என கூறினார். இந்த பணிநீக்கம் அடுத்த பட்ஜெட் சுழற்சியின் தொடக்கமான ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

