கோலாலம்பூர்:
கடந்த திங்கட்கிழமை ஜாலான் கெமாஜுவான், புக்கிட் கெச்சில் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் UniSZA பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 32 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை 9.45 மணியளவில் கோலா திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அந்த நபர் கொண்டு வரப்பட்டார். மாஜிஸ்திரேட் யுஹானிஸ் முகமட் ரோஸ்லான், இன்று முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1) (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவி 25 வயதுடைய ஷகிரா ஹனான் மஸ்லி (Syakirah Hanan Mazli) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள தனது ஆசிரியர் பயிற்சிக்கான (Practicum) அனுமதியைப் பெறுவதற்காக கல்வி அமைச்சை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தன்று மதியம் 1.38 மணியளவில், மாணவி போக்குவரத்துச் சிக்னலில் நின்று கொண்டிருந்தார். பச்சை விளக்கு எரிந்ததும் அவர் வலதுபுறமாகத் திரும்ப முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஹோண்டா ஜாஸ் கார், எதிர்பாராத விதமாக மாணவியின் கார் மீது பலமாக மோதியதாக கோலா திரெங்கானு மாவட்டப் போலீஸ் தலைவர் டெபுட்டி கமிஷனர் அஸ்லி முகமட் நோர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள 32 வயது ஓட்டுநர் கோலா நெருஸ், தெப்போ பகுதியைச் சேர்ந்தவர். அவர் ஜாலான் கெமாஜுவானிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து ஆசிரியராகப் பணியைத் தொடங்கவிருந்த மாணவியின் இந்த அகால மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




