கோலாலம்பூர்:
அம்னோ கட்சி அறிமுகப்படுத்தியுள்ள ‘ருமா பெங்சா’ (Rumah Bangsa) முன்முயற்சியின் மூலம், கட்சியை விட்டு வெளியேறிய அல்லது நீக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.
அம்னோவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் முன்னாள் முக்கியத் தலைவர்கள் மீண்டும் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் கைரி ஜமாலுடின், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், முகமட் சலீம் ஷெரிப் மற்றும் மௌலிசான் புஜாங் ஆகியோர் விண்ணப்பக் கடிதங்களை வழங்கியுள்ளனர்.
ஷாரில் சுஃபியான் ஹம்தான், நோ ஒமார் மற்றும் ராய்ஸ் யாத்திம் போன்ற முக்கிய உறுப்பினர்ர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வருகின்ற ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். அன்று பல முக்கியத் தலைவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம்.
அம்னோ கட்சி மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. ஆனால், 2018-ல் அது ஆட்சியை இழந்தது. இப்போது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும், மலாய்-இஸ்லாமிய அரசியலை ஒருங்கிணைக்கவும் ‘கொலாபரேசி அகுங்’ (Kolaborasi Agung) என்ற திட்டத்தின் கீழ் பிரிந்து கிடக்கும் தலைவர்களை ஒன்றிணைக்க முயல்கிறது. “பழைய நண்பர்கள் மீண்டும் ஒரு கூரையின் கீழ் வருவது” போன்றதுதான் இந்த நடவடிக்கை.
அம்னோவின் இந்த நடவடிக்கை வெறும் கட்சி மாற்றம் மட்டுமல்ல. இது எதிர்க்கட்சிகளில் இருக்கும் மலாய் தலைவர்களையும் உள்ளடக்கி ஒரு பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியாகும். இது மலேசியாவின் அரசியல் களத்தில் அதிகாரப் போட்டியை மாற்றியமைக்கக்கூடும்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அம்னோ துணைத் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தலைமை தாங்குகிறார்.
மலாக்கா முன்னாள் முதல்வர் ரஹீம் தம்பி சிக் போன்ற மூத்த தலைவர்கள் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.




