Last Updated:
U-19 உலகக் கோப்பை வரலாற்றில் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (ICC) U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய இளம் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 7.50 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் U-19 உலகக் கோப்பை வரலாற்றில் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்களின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ரூ. 7.50 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.


