யார் இந்த துளசி கபார்ட்?
43 வயதாகும் துளசி கபார்ட் தனது 21 வயதில் ஹவாய் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். துளசி என்ற பெயரையும் அவரது சமயத்தையும் வைத்து அவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நினைப்போம். ஆனால் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல.

துளசியின் குடும்பம் அமெரிக்காவில் அரசியல் பின்புலம் கொண்டது. அவரது தந்தை ஹவாய் மாநில செனட்டர் மைக் கபார்ட், அம்மா கரோல் போர்ட்டர் கபார்ட். அவரது அம்மா கரோல் போர்ட்டர் கபார்ட், அமெரிக்காவின் ஹரே கிருஷ்ணா இயக்கம் வளர்ச்சியடைந்தபோது இந்துவாக மதம் மாறியவர். அவரது ஐந்து குழந்தைகளுக்கும் நாராயண், விருந்தாவன், பக்தி, துளசி, ஜெய் என இந்து பெயர்களை சூட்டி இருக்கிறார்.

