இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை உயர்த்தப்போகிறேன் என்று நேற்று (ஆகஸ்ட் 5) அறிவித்த ட்ரம்ப், சொன்னதைப் போலவே இந்தியா மீதான வரியை இன்று மேலும் 25 சதவிகிதம் உயர்த்தி 50 சதவிகிதமாக விதித்திருக்கிறார்.
அதுவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கிவருவதால் அதற்கு அபராதமாக இந்த 25 சதவிகித வரி உயர்த்தியிருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இந்த அபராத வரி அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவால் 50 சதவிகித வரிவிதிப்புக்குள்ளான நாடாகியிருக்கிறது இந்தியா.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையை, `நியாயமற்றது, காரணமற்றது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்திருக்கிறது.
அதோடு, பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

