ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் சட்ட பூர்வமாக குடியேற வாய்ப்பு வழங்கிய CBP one செயலியை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார், ட்ரம்ப்.
மேலும் திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டங்களை நீக்கி, இனி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் எனவும் தெரிவித்ததோடு, சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் தடை விதித்துள்ளார். அத்துடன் ராணுவத்தில் மாற்று பாலினத்திற்கு தடை போன்ற உத்தரவுகளையும் பிறப்பிக்கவுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
இவ்வாறான பல உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு , தான் கையெழுத்திட்ட பேனாவினை கூட்டத்தில் வீசினார். அதனை மக்கள் எடுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ட்ரம்ப்பின் நிர்வாகம் இதற்கு முன்னர் ஆட்சி புரிந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலும் LGBTQ+ சமூக மக்களின் உரிமைகளை மீறுதல், பாரபட்சமான கொள்கைகளை வலியுறுத்துதல், அவர்களுக்கான சேவைகளைப் புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இத்தகைய அணுகுமுறையின் மூலம், lgbtq+ மக்களின் வாழ்க்கை, குடும்பம், சமூகம் மற்றும் உரிமைகள் போன்றவற்றை ட்ரம்ப் நிர்வாகம் புறக்கணிப்பது, தெளிவாகப் புலப்படுகிறது.
அமெரிக்காவின் 1964 சிவில் உரிமைகள் சட்டத்தின் தலைப்பு VII கீழ் எல்.ஜி.பி.டி.கியூ வினை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிரான பாகுபாடு, `பாலின பாகுபாடு’ ஆகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் சமுதாயத்தில் திருநர் சமூகத்தைச் சேர்ந்த பலர் சாதனைகளைப் படைத்து மக்களிடம் ஒன்றுபட்டு வாழ முயலும் இக்காலக்கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப், தங்களை நசுக்கி ஒடுக்க முயல்வதாக அந்த மக்கள் குற்றம்சாட்டி வேதனை தெரிவிக்கிறார்கள். ட்ரம்ப் அதிபராகியிருப்பது அவர்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

