அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின் அதிரடி பேச்சுகள், அதிரடி அறிவிப்புகள் என தொடர்ந்து வெளியிட்டு வரும் ட்ரம்ப், இன்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றியுள்ளார்.
அவர் பேசியதாவது…
“ஆறு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொற்காலத்தின் அதிபராகப் பொறுப்பேற்றேன். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து வரலாற்றின் வெற்றி காலமாக இருக்க வேண்டும் என்று பல பல அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறேன்.
அமெரிக்காவின் பெருமை, நம்பிக்கை உள்ளிட்டவை மீண்டும் திரும்பியுள்ளது. இதுவரை இருந்தவற்றை விட, தற்போது அமெரிக்காவின் கனவு மிகவும் பெரிதாகி உள்ளது. அமெரிக்காவின் கனவை யாராலும் நிறுத்த முடியாது. நம்முடைய தற்போதைய கம்பேக்கை உலகமே இதுவரை பார்த்திருக்காது. இனி மேலும் பார்க்காது.
இந்த ஆறு வாரத்தில் நான் நூறுக்கும் மேற்பட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன்… 400-க்கும் மேற்பட்ட அதிகார நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்டதாகும்.

பணி செய்வதற்காக மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பணியை நான் இப்போது செய்து வருகிறேன்.
‘நம்முடைய’ ஆட்சியின் முதல் மாதம் முழுவதும் வரலாற்றிலேயே நம் நாட்டின் சிறந்த ஆட்சி காலமாக இருந்தது என பலர் கூறியுள்ளனர்.
நான் பதவியேற்ற சில மணிநேரத்திலேயே அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தி, நம் நாட்டிற்குள் சட்ட விரோதமான குடியேற்றத்தை தடுக்க அமெரிக்க ராணுவத்தை அங்கு குவித்தேன். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு சட்ட விரோத குடியேற்றத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபரான ஜோ பைடன் ஆட்சியில் மாதம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சட்ட விரோத குடியேற்றங்கள் நடந்து வந்தன. அவர்களில் குற்றவாளிகள், கடத்தல்காரர்களும் அடங்குவர்.

