Last Updated:
ரேணிகுண்டா ரயில் நிலையப் பணிகள் காரணமாக சென்னை-திருப்பதி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ரயில்களின் சேவைகளும் மாற்றப்பட்டுள்ளன. முழு விவரத்தை பார்க்கலாம் வாங்க..
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் 48 நாட்களுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை – திருப்பதி இடையிலான விரைவு ரயில் உள்பட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும், திருப்பதியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும் டிசம்பர் 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதற்கிடையே, தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் 13, 20, 27-ந் தேதிகளில் காலை 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும். மறுமார்க்கத்தில் சந்திரகாச்சியில் இருந்து வரும் 14, 21, 28-ந் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில், 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மேலும், கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் இந்த மாதம் நடைபெற உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி காலை 11.35 மணி ரயில், சூலூர்பேட்டை – சென்ட்ரல் காலை 11.45 மணி ரயில், சென்ட்ரல் – சூலூர்பேட்டை மதியம் 12.10 மணி ரயில், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மதியம் 1 மணி ரயில் ஆகியவற்றின் சேவையில் வரும் 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28 மற்றும் 30-ந் தேதிகளில் ஒரு பகுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரயில், மேற்கண்ட தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக இந்த சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


