நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரத்து 525 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த முழு பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில், 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் குறைவாகும்.
உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட 101 கோடி ரூபாய் குறைவாக, 8 ஆயிரத்து 393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.
இது கடந்த முழு பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் 479 கோடி ரூபாய் அதிகமாகும். இதே போன்று, மருத்துவத்துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறையை பொறுத்தவரை கடந்த பட்ஜெட்டை விட 596 கோடி ரூபாய் அதிகமாக 13 ஆயிரத்து 561 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
எரிசக்தி துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட 5 ஆயிரத்து 350 கோடி குறைவாக 15 ஆயிரத்து 828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026-27 நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு 39 ஆயிரத்து 609 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும்.
இதே போன்று, உணவு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு, கடந்த பட்ஜெட்டை விட தற்போது 5 ஆயிரத்து 790 கோடி ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து 858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறையை பொறுத்தவரை 9 ஆயிரத்து 818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார். இது கடந்த பட்ஜெட்டை விட ஆயிரத்து 211 கோடி ரூபாய் அதிகமாகும்.
நெடுஞ்சாலைத்துறைக்கும் கடந்த பட்ஜெட்டை விட 382 கோடி கூடுதலாக 21 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

