2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வேளாண் பட்டதாரிகள் மற்றும் உழவர்களுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் இடங்களில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மையங்களை அமைத்திட 30 விழுக்காடு மானியமாக வழங்கப்படும் என்றும், இதற்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட ஹெக்டேருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்றும் இதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் மலைவாழ் உழவர்கள் மேம்பாட்டுக்கென சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்திற்கான நிதி உதவி 20 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” 15 திட்டக்கூறுகளுடன் 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படத்தப்பட உள்ளது.
மக்காச்சோள சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்திடும் வகையில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 40 கோடியே 27 லட்சம் ரூபாயில் மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் 79 ஆயிரம் உழவர்கள் பயனடைவார்கள் என்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். வேளாண் துறைக்கு மொத்தம் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 42 ஆயிரத்து 282 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், உழவர்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, சிறு குறு விவசாயிகள் நலன் உள்ளிட்ட அறிவிப்புகளை பட்டியிலிட்டுள்ளார்.
இத்தகைய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரம் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு பயனளிக்காத, ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலேயே வேளாண் பட்ஜெட் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 5 ஆவது முறையாக 1.45 மணி நேரம் பட்ஜெட் வாசித்ததே இவர்களின் சாதனை என்றும், விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் என்று அறிவித்துவிட்டு, வேளாண், மீன்வளம், பால்வளம், ஊரக வளர்ச்சி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவியல் போல பட்ஜெட் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வேளாண் பட்ஜெட் போலியானது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வானதி சீனிவாசன்
அதேபோல மத்திய அரசின் 70 சதவிகித திட்டங்கள், தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
ஜி.கே.மணி
பாசனத் திட்டங்கள் குறித்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல கோணங்களில் வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அண்ணாமலை
இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், நெல்லுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய், கரும்புக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டதாக பதிவிட்டுள்ளார். பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
March 15, 2025 3:30 PM IST