Telegram செயலிக்கு மீண்டும் செக் வைத்த மத்திய அரசு..15 நாள் தான் கெடு.. இந்த முறை தப்புமா?
இந்தியாவில் வாட்ஸ் அப்புக்கு அடுத்ததாக பிரபலமாக இருக்கும் ஒரு தகவல் பரிமாற்ற செயலி டெலிகிராம். கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் அடுத்தடுத்த சிக்கல் வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் வழியாகவே வினாத்தாள் பரவுவதாக கூறி மறு தேர்வு முடியும் வரை அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதித்திருந்தது. இந்த சூழலில் தான் டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் சினிமா மற்றும் ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் படங்கள், சீரிஸ்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து வரும் டெலிகிராம் சேனல்களை முடக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெலிகிராம் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சினிமா திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உரிமையாளர்கள், தங்களின் படைப்புகள் டெலிகிராம் தளத்தில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக பகிரப்படுவதாகத் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சினிமா படைப்பாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாக்கவும், காப்புரிமைச் சட்டங்களை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு டெலிகிராம் செயலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டதாக தெரிகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், டெலிகிராம் நிறுவனத்திற்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள நோட்டீஸில் Pirated contentகளை பகிரும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களை உடனடியாக முடக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஒவ்வொரு சேனலாக கண்டுபிடிட்த்து புகார் தந்து அவற்றை நீக்க உத்தரவிடுவது சாத்தியமில்லை என்பதால் டெலிகிராம் நிறுவனமே அதனை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
சட்டவிரோத சேனல்களை அடையாளம் கண்டு அவற்றை உடனே நீக்க வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அடுத்த 15 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சினிமா மற்றும் ஓடிடி தளங்களின் வருவாயை பாதிக்கும் வகையில், படங்கள், சீரிஸ்கள் ஆகியவை வெளியாகும் சில மணி நேரங்களிலேயே டெலிகிராமில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் திரைப்பட துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுப்பதன் மூலம், தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தான் டெலிகிராம் செயல்பட வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என அரசு எச்சரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அதிரடி உத்தரவு, டிஜிட்டல் தளங்களில் நடக்கும் அறிவுசார் சொத்துரிமை மீறல்களுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.முன்னதாக வாட்ஸ் அப் யூஸர் நேம் வசதி, இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் குறித்து விளக்கம் கேட்டு அரசு மெடா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

