“எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், கல்வி, மகளிர் நலம், இளைஞர் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையைத் திறம்படக் கையாண்டு, மாநிலத்தின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சியில் கொண்டு செல்வதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று நிதியமைச்சர் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.
அதன்படி இடைக்கால பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
விடியல் பயணம்: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மூலம் மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு மாதம் சராசரியாக ரூ. 888 வரை சேமிப்பு கிடைக்கிறது.
சொத்து வரிச் சலுகை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான அசையாச் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை: இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை: உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டம் : ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று சர்வதேசப் பயிற்சிகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் & தமிழ்ப் புதல்வன்: அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேரும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேரும் மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.
மடிக்கணினித் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூ. 2,172 கோடி செலவிடப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: 19.34 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் : 2030-க்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 1 லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டைடல் (TIDEL) பூங்காக்கள் :
தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக்க மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதிய டைடல் (TIDEL) பூங்காக்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் தஞ்சாவூர், வேலூர், கடலூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ‘மினி டைடல் பூங்காக்கள்’ அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ. 1,471 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ. 1,500 லிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் 8.52 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
ஓய்வூதியத் திட்டங்கள்: முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 5,463 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பண்பாடு மற்றும் அகழ்வாய்வு
அருங்காட்சியகங்கள்: கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களைத் தொடர்ந்து, சோழர் அருங்காட்சியகம் (தஞ்சாவூர்), சிந்துவெளி நாகரிக அருங்காட்சியகம் (சென்னை) உட்பட மொத்தம் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இலங்கைத் தமிழர் மற்றும் அயலகத் தமிழர் நலன்
மறுவாழ்வு முகாம்கள்: முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ. 630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அயலகத் தமிழர்: ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 42 நாடுகளில் 202 தொடர்பு மையங்கள் மூலம் இணையவழித் தமிழ் கல்வி வழங்கப்படுகிறது.
இது தவிர தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், ஒசூர், திண்டிவனம் உட்பட 12 இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான அறிக்கை தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசி வருகிறார்.

