
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24,921,537 ரூபா பணம், ‘ஈசி கேஷ்’ (Easy Cash) முறை மூலம் வைப்பிலிடப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத் தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், அந்தப் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட, ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த வங்கி கணக்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் தகவல்களுக்கமைய, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெளிவுபடுத்தியதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த வங்கி கணக்கின் ஊடாக 4,911,100 ரூபாய் பணம் புழக்கத்தில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

