பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதில், அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ்’ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட வேகத்தில், அருகிலிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கின. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20 கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன .
மின்சார வாகனங்களின் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட நச்சு வாயுக்கள் காரணமாக, தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்புப் படை செய்தி தொடர்பாளர் ஃபேபியோ கான்ட்ரையராஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இத்தகைய பேட்டரிகள் தீப்பிடிக்கும்போது, அவை அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களை வெளியிடுவதுடன், தீயின் வெப்பத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கின்றன. சாதாரண கார் தீ விபத்தை விட, மின்சாரக் கார் தீயை அணைக்க மூன்று முதல் நான்கு மடங்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது,” என்று விளக்கினார்.
அந்தப் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என்பதால், ஹெலிகாப்டர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத கார் நிறுத்துமிடத்தில் விழுந்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மற்றொரு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்தது. பிரேசிலில் ஹெலிகாப்டர் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது. விமான விபத்துகளை விசாரிக்கும் மற்றும் தடுக்கும் மையத்தின் (CENIPA) புள்ளிவிவரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்திற்கு முன்பாகவே 2026-ஆம் ஆண்டில் மட்டும் 84 விமான விபத்துகள் பதிவாகியுள்ளன.



