
48 வயதுடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CCID) அனுமதி பெற்றுள்ளது.
தெஹிவளையை வதிவிடமாகக் கொண்ட பஸிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஈரானிடமிருந்து தொடர்ச்சியான தாக்குதல்களைச் சந்தித்த காலப்பகுதியில், ஒரு சொகுசு ஷாப்பிங் வளாகத்தில் இருந்தபோது டுபாய் காவல்துறையினரால் தான் வழிமறித்து விசாரிக்கப்பட்டதாக பஸிக் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அலைபேசியை சோதனையிட்ட காவல்துறை, ஈரானியத் தாக்குதல்கள் தொடர்பான படங்களைக் கண்டறிந்ததாகவும், அதுவே தனது கைதுக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து நாடு கடத்தப்படும் வரை டுபாய் காவல்துறை தன்னை நாளாந்தம் விசாரித்ததாகவும் பஸிக் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

