இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பாதையில் ‘மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை’ கார் பந்தயத் தொடர், நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பச்சைக்கொடி அசைத்துப் பந்தயத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதே பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித்குமார், “திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். விஜய் முதலமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தன் பிசியான பணிச் சூழலுக்கிடையே, என்னுடைய அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கிவைக்க முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார்.
விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்கிறார். லண்டனில் உள்ள ‘சில்வர் ஸ்டோன்’ ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம். லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று தெரிவித்தார். (a)

