கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு வியாழக்கிழமை (20) கல்முனை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை காவல்துறையினர் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான காவல்துறைக் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரைைக் கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்

