
எஸ். கீதபொன்கலன்
கந்தளாய், பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் மூன்று வகுப்பறைகள் வியாழக்கிழமை (30) அன்றுஅதிகாலை காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகிச் சேதமடைந்துள்ளன.
கந்தளாய் – சீனிபுர பகுதியில் அமைந்துள்ள இந்த வித்தியாலயத்தின் எல்லைக்குள் புகுந்த காட்டு யானைகள், அதிகாலை 4:00 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மூன்று வகுப்பறைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
யானைகளின் இந்தத் தாக்குதலினால் பாடசாலையின் 3-ஆம், 4-ஆம் மற்றும் 5-ஆம் தர வகுப்பறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டிடத்தின் சுவர்கள், தளபாடங்கள், மாணவர்களின் கற்றல் உபகரணங்கள், அலுவலக அலமாரிகள், கணினிகள் மற்றும் குடிநீர் விநியோகத் தொகுதி (நீர் தாங்கி) உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
வகுப்பறைகள் சேதமடைந்துள்ள போதிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தற்காலிகமாக மாற்று இடங்களில் கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறான பாதிப்புகளைத் தடுக்கவும் உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் பிரதேச மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.








