
தீ விபத்து ஏற்பட்ட ஹொரணை, அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளரை, ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த முதியோர் பராமரிப்பு நிலையம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முதியோருக்கான உறைவிடப் பராமரிப்பு வசதிகளை நிர்வகிக்கும் இலங்கையின் சட்ட விதிமுறைகளின் கீழ், முறையான பதிவு எதுவும் இல்லாமலேயே இந்த நிறுவனம் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த இம்மையத்தில், இந்தத் துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 70 பேர் பராமரிப்பில் இருந்துள்ளனர். இவர்களில் 62 பேர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றும், 8 பேர் முதியவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்களைப் பராமரிப்பதற்கு, ஒரு சில பராமரிப்பாளர்கள் உட்பட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இங்கு தங்கியிருந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வழங்கிய தகவலின்படி, ஆரம்ப அனுமதித் தொகையாக 75,000 ரூபாயும், தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக ஒவ்வொரு நபருக்கும் மாதந்தோறும் சுமார் 35,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இப்பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் போது 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக 12 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

