
கொழும்பிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அந்த அமைதியான கிராமம். அங்குள்ள ஒரு நடுத்தரக் குடும்பம்; கணவன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள். குடும்பச் சுமையைத் தாங்கிக் கொள்ளக் கணவனும் மனைவியும் உழைக்கிறார்கள்; கூடவே ஒரு ஆட்டோவும் அவர்களின் பிழைப்புக்குத் துணையாய் இருக்கிறது.
அந்தத் தம்பதியின் மூத்த மகள், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா கல்வியைத் தொடர்வதோடு, கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை பகுதிநேர வேலை பார்த்து வருகிறாள். பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை அலுவலகப் பணி, அதன்பிறகு படிப்பு என அவளது தினசரி வாழ்க்கை ஒரு சக்கரமாகச் சுழல்கிறது.
அவளது தம்பியோ சாதாரண தரப் படிப்பை முடித்துவிட்டுத் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர்கிறான்; தங்கையோ இன்னும் இரண்டு ஆண்டுகளில் சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறாள்.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமை மற்றும் தம்பிகளின் கல்விச் செலவுகளைத் தாங்குவதற்காகத் தன் சொந்த ஆசைகளைத் துறந்து, கொழும்பில் வாடகை அறையில் தங்கிப் போராடிக்கொண்டிருக்கிறாள் அந்த மூத்த மகள்.
இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தன்னுடைய தூரத்து சொந்தமான மாமாவின் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க குளிர்ந்த பிரதேசம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். அந்தச் சந்திப்பின் போது, அப்பெண்ணின் தந்தை அனைவரின் முன்னிலையிலும் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைப் உதிர்த்தார்.
“கொழும்பில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளை நம்ப முடியாது; அவர்கள் எப்படியும் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள்; என் மகளே எல்லாவற்றிலும் சிறப்பானவள்” என்று தன் சொந்த மகளின் நற்பெச்சியைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பொதுவெளியில் அப்பட்டமாகப் பேசிவிட்டு வந்தார்.
தன் சொந்த மாமாவே தன்னைத் தாழ்வாகப் பேசியதையும், கொழும்பு வாழ்வைச் சந்தேகப்பட்டதையும் தனது தந்தையின் தொலைபேசி வாயிலாகத் தெரிந்துகொண்ட அந்த இளம் பெண்ணுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
அன்றைய தினம் சற்று உஷ்ணமான பானத்தை அருந்தியிருந்த தந்தை, மதுவின் போதையோ அல்லது உறவினர்களின் தவறான தூண்டுதலோ காரணமாக, நடுநிசியில் விடிய விடிய மகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாகத் திட்டித் தீர்த்தார். பழைய கதைகளைக் கிளறி, “நீங்களெல்லாம் அப்படித்தான்” எனத் தாழ்த்திப் பேசினார்.
அலுவலகத்தில் இரவு 10 மணி வரை கடினமான கடமைகளை முடித்துவிட்டு, தளர்ந்த நடையுடன் வாடகை அறைக்குத் திரும்பிய அந்தப் பெண்ணுக்கு உலகமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. பத்தாததுக்கு, தாயும் தங்கையும் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றுவிட, அரவணைப்பாரற்றுத் தனித்து விடப்பட்டார் அவள்.
தந்தையின் வார்த்தைகள் அவளது நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தன. கோபத்தையும் ஆற்றாமையையும் அடக்க முடியாமல் தவித்த அவளது கைகள், மேசையிலிருந்த கத்தரிக்கோலை நோக்கிச் சென்றன. தன் மீதான அவநம்பிக்கையையும், அந்தச் சமூகத்தின் முத்திரையையும் எதிர்த்துப் போராடுவது போல், தனது நீண்ட தலைமுடியைக் கண்ணாபின்னாவெனக் குதறி எறிந்தாள். அந்த அளவுக்கு அவளது உள்ளத்தில் ஆத்திரம் கொப்பளித்திருந்தது.
விடிந்து கண் விழித்துப் பார்த்தபோதுதான் தன் செயலின் விபரீதம் அவளுக்குப் புரிந்தது; தலைவிரிகோலமாக நின்ற தன் உருவத்தைக் கண்டு அவளே அதிர்ந்துபோனாள். ஆனாலும், மனம் தளராதவள்! உடனே யூடியூப் (YouTube) தளத்தில் சில ஹேர் ஸ்டைல் (Hair style) காணொளிகளைப் பார்த்து, மிச்ச சொச்ச முடியை எவ்வாறோ செப்பனிட்டு, கொழும்பிலிருந்து உடனடியாகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
இதற்கிடையில், அவளது அவசரப் பயணத்தால் பகுதிநேர வேலை மூன்று நாட்களுக்கு நின்றதுடன், அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பும் எடுக்க வேண்டியதாயிற்று. வீண் அலைச்சலும் மன உளைச்சலும் அவளை வாட்டின. ஆனால், வீட்டுக்குச் சென்றவள் சண்டை போட்டு ஓடவில்லை; மாறாக, மிகவும் முதிர்ச்சியோடு குடும்பத்தினருடன் அமர்ந்து அனைத்தையும் பேசித் தீர்த்தாள்.
“யார் எதைப் பற்றிப் பேசினாலும், எதைப்பற்றி வதந்தி அடித்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. நாம் என்னவென்று நமக்குத் தெரியும். நமது குடும்பத்தின் வளர்ச்சிக்கும், தம்பி, தங்கை படிப்புக்கும் பொறாமைப்பட்டுத்தான் சொந்தக்காரர்கள் இதுபோன்ற புரளிகளைக் கிளப்பிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு முடிவெடுப்பதே சிறந்தது” என்று தன் பெற்றோருக்குத் தைரியமும் பக்குவமான அறிவுரையும் வழங்கிவிட்டுத் தனது பணிக்குத் திரும்பினாள்.
ஆனாலும், ஆத்திரத்தில் தான் குதறிய தலைமுடியை அழகுபடுத்தச் சலூனுக்குச் சென்றபோது, தன் அறியாமைக்காக 7,000 ரூபாயைத் தண்டச் செலவாகச் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவளுக்கு ஏற்பட்டது. அவதூறுகளைத் தாண்டி, தன் உழைப்பாலும் உறுதியாலும் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் அந்தப் பெண், இன்றைய நவீனச் சமூகத்தில் போராடி வெல்லும் அத்தனை பெண்களின் அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறாள்!

