
சொந்த மனைவியையே கணவன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை கர்நாடகாவில் ஏற்படுத்தி வருகிறது. அதுவும், கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்டிருப்பது கன்னட உலகை அதிர செய்து வருகிறது.. என்ன நடந்தது பெங்களூருவில்?சினிமா மற்றும் சீரியல் உலகில் அறிமுகமான நடிகை சைத்ரா.. இவர் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இப்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் வர்தன் எண்டர்பிரைசஸ் மற்றும் வர்தன் சினிமாஸ் நிறுவனங்களின் உரிமையாளர், சினிமா தயாரிப்பாளரான ஹர்ஷவர்தன் என்பவருக்கும் கடந்த 2023ல் ஆண்டு திருமணம் நடந்தது.. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
பிரபல நடிகை சைத்ரா
திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் மட்டுமே இந்த தம்பதி ஒன்றாக வாழ்ந்த நிலையில், குடும்ப பிரச்சினைகள் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஏழெட்டு மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஹர்ஷவர்தன் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் வசித்து வருகிறார்.. நடிகை சைத்ரா தனது மகளுடன் பெங்களூருவில் தங்கியுள்ளார்… குழந்தையை முழுமையாக சைத்ராவே பராமரித்து வருவதாக தெரிகிறது..குழந்தையை பார்க்க அனுமதியில்லை
இந்த நிலையில், ஹர்ஷவர்தன் தனது மகளை பார்க்க வேண்டும் என்றும், சில நேரங்களில் தன்னுடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் சைத்ராவிடம் கேட்டாராம்.. ஆனால் இதற்கு சைத்ராவும், அவரது குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை. மகளை காணாத ஏக்கத்தில் இருந்த ஹர்ஷவர்தன், இதனால் கடும் கோபமடைந்துள்ளார். எனவே அதிர்ச்சியளிக்கும் ஒரு பிளானை தீட்டியிருக்கிறார்..
அதன்படி, தனது மனைவி சைத்ராவை கடத்தி மிரட்டி, அதன் மூலம் குழந்தையை பறித்துக் கொள்ள ஹர்ஷவர்தன் முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, அவர் தன்னுடைய நண்பர் கவுசிக் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்..
மைசூருவில் ஒரு ஷூட்டிங் இருப்பதாகவும், அதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி சைத்ராவை வர சொல்லியிருக்கிறார்கள்… இதற்காக ரூ.20 ஆயிரம் அட்வான்ஸூம் கொடுக்கப்பட்டுள்ளது.. ஷூட்டிங்குக்காக வீட்டிலிருந்து காரில் அழைத்து செல்வதாக சொன்ன கவுசிக், நேற்று சைத்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஷூட்டிங் கிளம்பிய நடிகை
பட வாய்ப்பு என்பதால் சைத்ராவும் சந்தேகமின்றி காரில் ஏறி கிளம்பி உள்ளார்.. அவர்கள் நைஸ் ரோடு வழியாக சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மற்றொரு காரில் வந்த ஹர்ஷவர்தன், கவுசிக்கின் காரை வழிமறிப்பது போல நாடகமாடியுள்ளார். பிறகு, சைத்ராவை தாக்கி, பலவந்தமாக தன்னுடைய காரில் ஏற்றி கடத்திசென்றுவிட்டார்..
பிறகு ஹர்ஷவர்தன் தன்னுடைய மாமியாருக்கு அதாவது சைத்ராவின் அம்மாவுக்கு போனை போட்டு “உங்கள் மகளை நான் கடத்தி வைத்துள்ளேன். என் மகளை என்னிடம் ஒப்படைத்தால் மட்டுமே உன் மகளை பாதுகாப்பாக விடுவிப்பேன்” என்று மிரட்டினாராம்..
காதல் கணவர் எங்கே
இதைக்கேட்டு பயமும் அதிர்ச்சியும் அடைந்த சைத்ராவின் அம்மா, இந்த விஷயத்தை தன்னடைய இன்னொரு மகளிடம் சொல்லவும், உடனடியாக அவர் பேடராயனபுரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹர்ஷவர்தனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.. சினிமா பின்னணியுள்ள குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம், பெங்களூரு மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

