மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன் 30, 2026 அன்று, மிகவும் அபாயகரமான சூழலில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும், துணிச்சலையும் இந்தச் செயல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ‘அம் தஃபோக்’ (Am-Dafock) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சாம்பியா நாட்டுத் துருப்புக்களைக் குறிவைத்து, அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் சாம்பியா வீரர்கள், பொதுமக்கள் மற்றும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்கப் பாகிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைக்க எடுக்கப்பட்ட முதற்கட்ட முயற்சி, மோசமான வானிலை காரணமாகத் தோல்வியடைந்தது. அதனையடுத்து, சமாதானப் படையின் கட்டளைத் தளபதி, இந்த மீட்புப் பணியை இலங்கை விமானப்படை வான் பிரிவிடம் உடனடியாக ஒப்படைத்தார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இலங்கை விமானப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் அசிரி பத்திரகே மற்றும் குழுவினர், மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கைக்குத் தயாராயினர். குரூப் கேப்டன் அசிரி பத்திரகே தலைமையிலும், ஃபிளைட் லெப்டினன்ட் தில்ஹாஷ் அத்தப்பத்து துணை விமானியாகவும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ‘UNO 325P’ ரக Mi-17 ஹெலிகாப்டர், அன்று காலை 07:30 மணிக்கு பிரியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த மீட்புக் குழுவில் பின்வரும் அதிகாரிகள் பணியாற்றினர்:
- விமானப் பொறியாளர்: ஃபிளைட் சார்ஜென்ட் ஹெட்டியாராச்சி டி.எஸ்.
- லோட் மாஸ்டர் (Load Master): ஃபிளைட் சார்ஜென்ட் மனோஜ் ஏ.ஜி.ஜி.
- வான் துப்பாக்கி வீரர்கள்: கோப்ரல் விஜேதுங்க டபிள்யூ.எம்.பி.பி. மற்றும் சிரேஷ்ட வான்படை வீரர் அபேசிங்க ஜி.டி.
- வான்வழி மருத்துவ மீட்புக் குழு (AMET): ஃபிளைட் லெப்டினன்ட் யதீஷ ரத்னசிறி, வாரண்ட் அதிகாரி டி.எம். சுமதிபால மற்றும் ஃபிளைட் சார்ஜென்ட் கே.பி.டி. ருவன்குமரா.
ஆரம்பத்தில் கூடுதல் துருப்புக்களை ஏற்றிச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சண்டை நடக்கும் பகுதியில் நிலைமை மோசமடைந்ததால், தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் விமானிகள் ஹெலிகாப்டரை நேரடியாகப் போர்க்களத்திற்கே செலுத்தினர். இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பயணித்த பிறகு, எதிரித் தாக்குதல்கள் நீடித்த அந்த அபாயகரமான பகுதியை விமானம் சென்றடைந்தது. தரையிறங்குவது கூட பாதுகாப்பற்றதாக இருந்த அந்தச் சூழலில், இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கையிலேயே, துணிச்சலுடன் காயமடைந்த 14 பேரை விமானிகள் பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டனர்.
குறைந்த இடவசதி மற்றும் மருத்துவ வசதிகளுக்கு மத்தியிலும், விமானத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் (AMET) காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றப் போராடினர். ஐ.நா. அமைதிப்படை விமானப் போக்குவரத்து வரலாற்றில், ஒரு அவசரகால நடவடிக்கையில் 14 பேர் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மீட்கப்பட்ட முதல் நிகழ்வாக இது வரலாற்றுச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமது உயிரைப் பணயம் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்த இலங்கை விமானப்படை வீரர்களின் தைரியத்தையும், திறமையையும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் படைத் தளபதி பெரிதும் பாராட்டியுள்ளார். இது சர்வதேச சமூகத்தில் இலங்கை ஆயுதப் படைகளின் நம்பகத்தன்மையையும் நற்பெயரையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.







