
தெற்கு பாயகலை பகுதியில் நேற்று (14) இரவு நபர் ஒருவர் பொல்லால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாயகலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தெரணியகலகே நிஷாந்த பீரிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாயகலை, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மதுபான விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, அங்கு ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்த நபர்களுக்கிடையே வாய்்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மதுபான விருந்து முடிவடைந்த பின்னர், உயிரிழந்த நபர் தெற்கு பாயகலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காய்கறி கடைக்கு சமீபமாகச் சென்றுகொண்டிருந்தபோது, பொல்லால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பாயகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

