பின்தங்கிய பகுதியொன்றைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர், ஹெம்மாத்தகம – மாவனெல்லை வீதியில் உள்ள தேவநகல பகுதியில் ‘சிங்கள ஆயுர்வேத மருத்துவ மையம்’ ஒன்றை நடத்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் உடலிலுள்ள ‘தோஷங்களை நீக்குவதற்காக’ சாந்தி கர்மம் (பூஜை) செய்வதாகக் கூறி, ஏமாற்றி பாலியல் அத்துமீறல் செய்துள்ளமைபொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி மாவனெல்லை பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவியாவார். சந்தேகநபரைக் கைது செய்துள்ள மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

