பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரித்தானிய நடிகர் மைக்கேல் வார்ட், லண்டனில் உள்ள ஸ்னேர்ஸ் புரூக் கிரவுன் நீதிமன்றத்தினால் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
28 வயதான மைக்கேல் வார்ட் மீது இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளும், மூன்று பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜூரி சபை, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை எனக் கண்டறிந்து, அவரை நிரபராதி எனத் தீர்ப்பளித்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றில் குறித்த பெண்ணைச் சந்தித்த மைக்கேல், பின்னர் காரில் வைத்து அவரைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்ற விசாரணையின் போது, தங்களுக்கு இடையே இடம்பெற்றவை இரு தரப்பின் முழுச் சம்மதத்துடன் நடந்தவை என மைக்கேல் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மிகவும் சுமுகமாகவே இருந்ததாகவும், அங்கிருந்து வெளியேற விரும்புவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை என்றும் மைக்கேல் நீதிமன்றில் தெளிவுபடுத்தினார்.
2020-ஆம் ஆண்டு ‘பாஃப்டா ரைசிங் ஸ்டார்’ (Bafta Rising Star) விருது வென்ற மைக்கேல் வார்ட், ‘ஸ்மால் ஆக்ஸ்’ (Small Axe) மற்றும் ‘எம்பயர் ஆஃப் லைட்’ (Empire of Light) ஆகிய திரைப்படங்களுக்காகப் பல்வேறு விருது விழாக்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு திறமையான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


