
பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் புதன்கிழமை (18) திகதி குறித்துள்ளது.
பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி, தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அடிப்படை மனித உரிமைகள் மீறல் எனவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

