
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளிகள் கைது
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய ஐந்து பேர் மிக முக்கியமான குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் ஐந்து பேரையும் பொலிஸார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
சிங்கப்பூர் தொழிலதிபர் லட்சுமண பெருமாள்
கைதானவர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் பேசியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதமான ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் அந்தத் தொழிலதிபரின் பெயர் லட்சுமண பெருமாள் என்பது உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர், சென்னையில் உள்ள பல அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
இந்தத் தொடர்பின் மூலமாகவே, குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் லட்சுமண பெருமாளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காகச் சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள், சென்னையைச் சேர்ந்த நபர்களோடு அலைபேசியில் பேசி சதித்திட்டம் தீட்டியுள்ளார். இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்குப் பினாமியாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
‘லுக்-அவுட்’ நோட்டீஸ்
லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தச் சிங்கப்பூர் தொழிலதிபரைத் துரிதமாகக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டு, அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணைக்கு ஆஜராகும் செந்தில்பாலாஜி
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதேவேளையில், அவர்கள் இருவரும் தினமும் காலையும் மாலையும் திருவல்லிக்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதனடிப்படையில், செந்தில்பாலாஜியும் அவரது தம்பியும் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்காக திருவல்லிக்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

