வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரு எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றின் அசாத்திய தோற்றம் மட்டுமல்லாமல், அவற்றுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களும் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
சுமார் 700 கிலோகிராம் எடை கொண்ட ‘அல்பினோ’ வகை எருமை ஒன்று, அதன் வெளிர் நிறத் தோல் மற்றும் முடியால் அனைவரையும் கவர்ந்துள்ளது.
குறிப்பாக, அதன் தலையில் உள்ள முடியின் அமைப்பானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகப் புகழ்பெற்ற சிகை அலங்காரத்தை அப்படியே ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த எருமைக்கு நெட்டிசன்கள் ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்துப் பண்ணையின் உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “உருவத்திலும் சிகை அலங்காரத்திலும் அமெரிக்க அதிபர் டிரம்பைப் போல இருந்தாலும், இந்த எருமை மிகவும் அமைதியானதும் சாதுவானதும் ஆகும்,” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
இதேவேளை, நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும், 750 கிலோகிராமுக்கும் அதிக எடை கொண்ட பிறிதொரு எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் எருமையைப் போலன்றி, இந்த நேதன்யாகு எருமை மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டதாகவும், எந்நேரமும் குறும்புத்தனமாக நடந்து கொள்வதாகவும் பண்ணை மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த எருமைக்குத் தந்திரமான புத்திசாலித்தனம் இருப்பதாகப் பண்ணை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.


