” ‘டித்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட லயன் அறைகளுக்குத் தலா 50 இலட்சம் ரூபாய் நிதியும், 10 பேர்ச் காணியும் வழங்கப்படும். அதேபோல், பகுதியளவில் பாதிக்கப்பட்ட லயன் அறைகளுக்கு மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நிவாரணமும் அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, வழங்கப்படும்,” எனப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“டித்வா புயலினால் பெருந்தோட்டத்துறை சார்ந்த பகுதிகளில் 10,310 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 431 லயன் அறைகள் முழுமையாகவும், 2,152 லயன் அறைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக, அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப, முழுமையாகச் சேதமடைந்த வீட்டுக்கு 50 இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீட்டுக்கு 25 இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு நிவாரண நிதியை வழங்குவதில் ஆரம்பத்தில் சிக்கல் காணப்பட்டது. ஏனெனில், அந்த லயன் அறைகள் அவர்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஆகவே, இந்தச் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் பொருட்டு, ஜனாதிபதி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட தீர்மானமொன்று எடுக்கப்பட்டது.
அந்த அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, முழுமையாகப் பாதிக்கப்பட்ட லயன் அறைகளுக்கு 50 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் 10 பேர்ச் காணியும் வழங்கப்படும். பகுதியளவில் பாதிக்கப்பட்ட லயன் அறைக்குச் சேத விபர மதிப்பீட்டுக்கு அமைய 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரையில் நிவாரணம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான மாற்று நிலங்களை வழங்குவது தொடர்பில் தற்போது தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரைக்கு அமைவாகவே இக்காணிகளை வழங்க முடியும். ஆபத்தில்லாத, பாதுகாப்பான இடங்களில் காணிகளை வழங்கி அந்த மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் கடந்த 200 ஆண்டுகாலமாகப் பேசப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார். கடந்த காலங்களில் இவர்களும் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள்தான். மலையக மக்களின் இந்தப் பிரச்சினைகளை இன்னும் 100 ஆண்டுகளுக்குக் கொண்டு செல்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவர்களின் காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைகளுக்கு விரைவில் நிலையான தீர்வு வழங்கப்படும்,” என்றார்.

