ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை எழும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வந்த சட்டக் கல்லூரி மாணவியிடம், அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டைக் கேட்டுள்ளனர். தான் ரயிலில் பயணம் செய்யவில்லை, உறவினரை வழியனுப்ப வந்ததாகக் கூறிய மாணவியிடம், அவர்கள் ‘பிளாட்பார்ம்’ டிக்கெட்டைக் கேட்டுள்ளனர். அவரிடம் அது இல்லாததால், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது மாணவியின் செல்போனை பரிசோதகர் வாங்கி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, தனது செல்போனைத் திருப்பித் தருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். செல்போன் வழங்கப்படாததால், திடீரென அந்தப் பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் மாணவி பளார் என்று அறைந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் இத்தகைய மோதல் சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


