இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நபரே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தனது வீட்டிற்கு உயிருடன் வந்திறங்கிய விசித்திரச் சம்பவம் கல்கமுவ, கொஹொபங்குளம் கிராமத்திலிருந்து பதிவாகியுள்ளது.
இவ்வாறு திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன சிறைச்சாலைக்குள் மரணமடைந்துவிட்டதாக பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைக் கேட்டுத் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராமவாசிகளும் இணைந்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
கிராமம் முழுவதும் மரண அறிவித்தல் பதாகைகள் கட்டப்பட்டு, இறுதிச் சடங்கிற்குத் தேவையான பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கீர்த்திசேன வீட்டிற்கு உயிருடன் வந்து சேர்ந்துள்ளார்.


