சர்வதேச அடிமை வணிக நினைவூட்டல் மற்றும் அதன் ஒழிப்பு தினம் இன்று (23) உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான UNESCO அமைப்பின்படி, இந்தத் தினம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது.
“இந்த நாளின் முக்கிய நோக்கங்கள்”
- அடிமை வணிகத்தின் வரலாறு, அதனால் மனிதகுலம் அனுபவித்த துயரங்கள் மற்றும் அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டங்களை நினைவுபடுத்துவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.
- மேலும், அடிமை வணிகத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
“ஓகஸ்ட் 23 தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி”
- தற்போதைய ஹைதி (Haiti) நாடாக விளங்கும் செயின்ட்-டொமிங்குவில் (Saint-Domingue) 1791 ஆம் ஆண்டில் அடிமை கிளர்ச்சியை நினைவுகூரும் வகையில் ஓகஸ்ட் 23 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-23 திகதிகளில் நள்ளிரவில் ஆரம்பமான இந்த கிளர்ச்சி, அடிமை முறையையும் சர்வதேச அடிமை வணிகத்தையும் ஒழிப்பதற்கான இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.
“வரலாறும் சர்வதேச அனுசரிப்பும்”
- யுனெஸ்கோ அமைப்பின்படி, இந்தத் தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு ஹைதியிலும், 1999 ஆம் ஆண்டு செனகல் (Senegal) நாட்டின் கோரி (Gorée) தீவிலும் கொண்டாடப்பட்டது.
- அன்றிலிருந்து, அடிமை வணிகத்தின் வரலாறு மற்றும் அடிமை முறை ஒழிப்பு குறித்து நினைவுபகூறவும், படிக்கவும் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது ஒரு சர்வதேச வாய்ப்பாக வளர்ந்துள்ளது.
- அடிமை வணிகம் மற்றும் அடிமை முறையினால் ஏற்பட்ட வரலாற்று ரீதியான அநீதிகள் மற்றும் அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்து புதிய தலைமுறை அறிந்துகொள்ளவும், மனித உரிமைகள், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை மதிக்க உறுதிபூணவும் இந்த நாள் அறைகூவல் விடுக்கிறது.
“நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான விழிப்புணர்வு”
அடிமை வணிகம் மற்றும் அடிமை முறையின் வரலாற்றை நினைவுகூருவது கடந்த காலத்திற்குச் செய்யும் அஞ்சலி மட்டுமல்லாமல், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அனைத்து வகையான பாகுபாடுகள், இனவெறி மற்றும் மனிதத் தன்மையற்ற நடத்துதல்களுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதற்கும் அவசியமானது என்று யுனெஸ்கோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


