முன்னாள் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரின் மகனால் கொழும்பு – கொம்பனி வீதி (கொள்ளுப்பிட்டிய) 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள பாம் கோர்ட் தொடர் மாடி குடியிருப்பிலிருந்து வௌ்ளிக்கிழமை (04) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தம்பதியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை கண்காணிப்பாளருமான சட்டத்தரணி உதய குமார வூட்லர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த தம்பதியர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய திருமணமாகாத நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12-ஆம் இலக்கத் துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் தோட்டாக்கள் மற்றும் இரண்டு காற்றுத் துப்பாக்கிகளுடன் (Air Rifles) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் சந்தேகநபருடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதுடன், கடந்த வியாழக்கிழமை (03) இரவில் மற்றுமொரு நபரையும் அந்தப்பெண் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளமை காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தம்பதியர் களுபோவில அல்லது கிருளப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


